நன்றி:
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் (அட்சரம்)
http://www.tamiloviam.com
http://www.tamiloviam.com/atcharam/page.asp?ID=30&fldrID=1
நாள் : 8/19/2004 12:30:55 PM
தீராப்பசி - எஸ்.ராமகிருஷ்ணன்
வள்ளலாரின் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தினைக் காண்பதற்காக இரண்டு நாட்களுக்கு முன்னால் நெய்வேலியிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் வடலூருக்குச் சென்றிருந்தேன். வடலூர் இப்போதும் மிகச்சிறிய ஊராகவேயிருக்கிறது. நூற்றாண்டுகளுக்கு முன்னால் நிச்சயம் மிகக் குக்கிராமங்களில் ஒன்றாக இருந்திருக்க கூடும். வள்ளலார் எதற்காக இந்த ஊரை தனது சத்திய ஞான சபையை உருவாக்குவதற்கு தேர்வு செய்தார் என்று தெரியவில்லை. காலம் மாறியபோதும் அந்த ஊரும் மக்களும் அப்படியேயிருக்கிறார்கள். செம்மண் புழுதி படிந்த சாலையின் தொலைவிலே பால் வெண்மையில் தெரிகிறது எண்கோணவடிவத்தில் அமைந்த சமரச சன்மார்க்க சங்கத்தின் கட்டிடம். அருகில் சென்று பார்க்கும் போது இப்போதும் அதன் புத்துரு மங்காமல் அப்படியே இருக்கின்றது. வள்ளலாரே வடிவமைத்துக் கட்டிய கட்டிடமது. அதன் வழுவழுப்பான சுவர்களைத் தடவிப்பார்க்கும் போது நேர்த்தியும் உறுதியையும் உணரமுடிகிறது.
நான் வந்த வழியெங்கும் எங்கிருந்தோ சாதுக்களும் பண்டாரங்களும் மெலிந்த உடலோடு மெதுவாக நடந்து வந்தபடியிருந்தார்கள். பெரிய மைதானமும் ஒன்றிரண்டு வீடுகளையும் தவிர அந்தப்பகுதியில் பெரிய கட்டிடங்கள் எதுவுமில்லை. அந்தப் பகுதியை சுற்றிலும் பல்வேறு ஊர்களில் உள்ள வள்ளலாரின் சபைக்குரிய அன்னதானச் சத்திரங்களும் அதற்குரிய அலுவலகங்களும் காணப்படுகின்றன.
வள்ளலாரின் திருஅருட்பாவை வாசித்த நாட்களில் அதன் கவித்துவமும் உள்ளார்ந்த அன்பும் அக்கவிதைகளை மனதில் ஆழ்ந்து வேரோடச் செய்திருந்தது. சமீபமாக அவரது உரைநடைகளையும் கடிதங்களையும் வாசித்ததும் வடலூரின் சத்திய ஞான சபையைக் கண்டு வரவேண்டும் என்று தோணியது. பலவருடங்களுக்கு முன்பாக பார்த்திருக்கிறேன். ஆனாலும் நினைவில் அதிகம் தங்கவில்லை.
வள்ளலாரின் எண்ணமும் செயல்பாடும் காலத்தை முன்னுணர்ந்து செயல்பட்டது போலிருக்கின்றது. எந்த தேசத்தில் வாழ்ந்த போதும் மனிதனின் தீராப் பிரச்சனை பசி தான். மனிதவாழ்வின் உந்துதல் பசி. அது தான் மனிதனை வேலையைத் தேடிக்கொள்ளச் செய்கிறது. குடும்பத்தை அமைந்துக் கொள்கிறது. குழந்தைகளின் பசியை போக்குவது தான் பெற்றவனின் முதன்மையான கடமை. அது போலவே பசியைப் போக்குவது தான் அறத்தின் உயர்நிலை. தமிழில் பசியை பிணி என்கிறார். எத்தனை நிஜமான சொல்லது. பசிப்பிணியை போக்குவதற்காக அமுதசுரபியை ஏந்திப் புறப்படுகிறாள் மணிமேகலை. பசிப்பிணியை வெல்வது எளிதானதில்லை
ஜென்கதைகளில் ஒன்றிருக்கிறது. ஆற்றின் இரண்டு கரைகளில் இரு துறவிகள் இருந்தனர். வலதுபுறமிருந்த கரையிலிருந்த துறவி தண்ணீரில் நடந்து காட்டக் கூடியவர். காற்றில் எழுதிக்காட்டக் கூடியவர். இடது புறமிருந்த துறவிக்கு இது போன்ற சித்துகளும் எதுவும் தெரியாது அதனால் அவரிடம் சீடர்கள் வந்து சேர்வது கிடையாது. ஒரு நாள் புதிதாக ஒரு மாணவன் அவரிடம் வந்து சேர்ந்தான். அவன் ஆர்வத்துடன் நீங்கள் ஏன் மாயங்கள் செய்வதில்லை என்று கேட்டான். அதற்கு இடதுபுறமிருந்த துறவி தான் செய்யும் மாயங்களை மற்றவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டேன் என்கிறார்கள். உனக்காவது புரிகிறதா பார்ப்போம் என்றபடி. எனக்கு பசியெடுத்தால் சாப்பிடுகிறேன். சாப்பிட்டதும் பசி எங்கே போனது என்று மாயமாகயிருக்கிறது. அது போலவே தாகமாகயிருக்கும் போது தண்ணீர் குடிக்கிறேன். தாகம் எங்கே மறைந்தது என்றே தெரியவில்லை. இவை யாவையும் விட பெரிய மாயம். உறக்கம் வந்த போது நான் உறங்கிப் போய்விடுகிறேன் இந்த மொத்த உலகமே எனக்குத் தெரியாமல் மறைந்துவிடுகிறது. .இதெல்லாம் மாயமில்லையா என்று கேட்டார். சீடனுக்கு அவரது அருமை புரிந்து அவரிடத்தில் தங்கிவிடுகிறான்.
பசி தான் மனிதனின் சகலகுரோதங்களுக்கும் மூலவேர். பசியோடிருப்பவன் எந்த நியாயத்திற்கும் கட்டுப்படமாட்டான். குற்றவாளிகளுக்கு கூட வேளைக்குவேளை சரியாக உணவு வழங்கப்படுகிறது. நம் உடல் தான் நமக்கிருக்கும் ஒரே சாதனம். மனிதன் இருவகைப் பசியால் பீடிக்கப்பட்டிருக்கிறான். உடல் தன்னை வளர்த்துக்கொள்வதற்கு வயிற்றுப் பசியை உருவாக்குகிறது. இன்னொன்று தன்னை போல இன்னொரு உடலை உற்பத்தி செய்வதற்கு காமத்தை இரண்டாம் பசியாக உருவாக்குகிறது. பசியோடு இருப்பவன் காமத்தை விடவும் வயிற்றை நிரப்புவதில் தான் அதிக நாட்டம் கொள்வான்.
எல்லா இறைதூதர்களும் பசியைப் போக்குவதை தான் முதன்மையான அற்புதமாக நிகழ்த்தியிருக்கிறார்கள். பசியைப் பற்றி பேசாத மதமேயில்லை. பத்து பேர் உண்ணும் அப்பத்தை நூறு பேருக்கு பங்கிட்டு கொடுத்ததும். விருந்தில் தண்ணீரை திராட்சை ரசமாக்கியதும் கிறிஸ்துவின் அற்புதங்கள் என்றால் அதனடியில் பசியுணர்ச்சி தான் பிரதானமாகயிருந்திருப்பதை கவனிக்க வேண்டியிருக்கிறது.
வள்ளலார் கவிஞரா? ஆன்மீகவழிகாட்டியா? ரசவாதியா? சைவ சித்தாந்தத்திற்கு புத்துணர்வு தந்தவரா? அன்பின் வழியாக புதிய மெய்வழியை உருவாக்கியவரா? இப்படி அவருக்கு பலமுகங்களிருக்கின்றன. அவரது செயல்பாடுகள் யாவிலும் ஒன்றென கலந்திருப்பது மனித வாழ்வின் மீது அவர் கொண்டிருந்த அக்கறை. அதற்கு வழிகாட்டும் அன்பு
திருஅருட்பா எழுதி அன்பை தன் கவிதைகளில் வெளிப்படுத்தியதோடு நின்றுவிடாமல் பசிப்பிணியை போக்குவதற்காக தர்மசாலைகளை நிறுவியிருக்கிறார். 1867 ல்துவங்கி இன்று வரை அந்த தருமசாலையின் அடுப்பு எரிந்து கொண்டேயிருக்கிறது.
வடலூரிலுள்ள அணையாத அடுப்பின் முன்பாக போய் நின்று கொண்டிருந்தேன். நெருப்பின் உதடுகள் அசைந்துகொண்டிருந்தன. கரும்புகை படிந்த சுவர்கள். பழமையான கிணறு. நாலைந்து பாத்திரங்களை ஏற்றியிறக்கும் நீண்ட அடுப்பு. அங்கே விறகுகளை தான் அடுப்புக்கு பயன்படுத்துகிறார்கள். இரவில் நெருப்பு குறைக்கபட்டு சிறிய தணலாக்கி மறுநாள் காலையில் தயாரிக்கப் போகும் கஞ்சிக்காக வெந்நீர் கொதிக்கவிட்டுவிடுவார்களாம். நான் சென்றிருந்த மதிய வேளையில் உணவு தயாராகிக் கொண்டிருந்தது.
சமையற்கூடத்திலிருந்த தணலைக் காணும் போது நெருப்பு ஒரு கருணை என்றே புரிகிறது. மனிதன் நெருப்பைக் கண்டுபிடித்தது தான் அவனது இத்தனை வளர்ச்சிக்கும் அடிப்படை. ஆனால் இன்றைக்கும் நெருப்பைத் தன் வசத்தில் கட்டுபடுத்தி வைக்க மனிதனுக்குத் தெரியவில்லை. இரவும்பகலும் அணையாமல் எரியும் அந்த அடுப்பின் வழியாக தினமும் காலையில். மாலையில் முந்நூறுக்கும் மேற்பட்டவர்களும். மதியம் ஆயிரம் பேரும் உணவு உண்கிறார்கள். அன்னதானம் தானே என்று ஏதோவொரு சாப்பாடு கிடையாது. வடையும் பாயாசமும் அப்பளமும் பொறியலும் ரசமும் சாம்பாரும் கொண்ட முழுமையான சாப்பாடு. சாப்பிடவருபவர்களை யாரும் எங்கிருந்து வருகிறார்கள் என்று கேட்பதில்லை. சாப்பாட்டைப் பரிமாறுபவர்கள் குழந்தைக்குச் சாப்பாடு ஊட்டுவது போல அத்தனை கரிசனத்துடன் உணவு தருகிறார்கள். சாதுக்களும் சந்நியாசிகளும் மட்டுமல்ல வெளியூரிலிருந்து வந்தவர்கள். முதியவர்கள். வறுமையால் அங்கேயே தங்கியிருப்பவர்கள் என பலரும் உணவு உண்ண வருகிறார்கள்
தனிநபர்களின் உதவியாலும் தீவிரமான ஈடுபாட்டாலும் மட்டுமே சாத்தியமாகயிருக்கும் அதிசயமிது. உலகமெங்கும் பல்வேறு மதநிறுவனங்கள் உணவளிக்கின்றன. அதன் பின்னால் ஏதாவது ஒரு காரணமிருக்ககூடும். குறைந்த பட்சம் அவர்கள் இறை நம்பிக்கையை ஏற்றுக்கொள்பவர்களாகயிருக்க வேண்டும் என்றாவது கட்டாயமிருக்கிறது. ஆனால் வள்ளலாரின் சபையில் அப்படி எந்தக் கட்டாயமும் இல்லை. மனிதர்கள் ஒருவரையொருவர் நேசிக்கவேண்டும் என்றால் பசியில்லாமல் இருக்கவேண்டும் என்று மட்டுமே வலியுறுத்தபடுகிறது.
அந்த சமையல்புரையில் நின்றுகொண்டேயிருந்தேன். வள்ளலார் காலத்தில் எந்த இடத்தில் உணவு தயாரிக்கபட்டதோ. அளிக்கப்பட்டதோ அதே இடத்தில் தற்போதும் உணவளிக்கபடுகிறது. மரப்பலகையில் சாதம் வடித்து கொட்டப்பட்டிருக்கிறது. அதன் மணம் அறையெங்கும் நிரம்பியுள்ளது. சமையற்கூடத்தில் பணியாற்றுபவர்கள் யாவரும் சபைக்காக சேவகம் செய்பவர்கள்.
எழுத்தாளன் என்பவன் பேக்கரியில் ரொட்டி தயாரிப்பவனைப் போன்றவன் தான். ரொட்டி செய்பவன் பதமாகவும் ருசியாகவும் ரொட்டியைச் சுட்டு எடுக்க வேண்டும். அது யாருடைய பசியைத் தீர்க்கப் போகிறது என்று அவனுக்குத் தெரியாது. அதே நேரம் தான் மற்றவர்களின் பசியைத் தீர்க்கிறேன் என்று ரொட்டி தயாரிப்பவன் வீண் பெருமை பட்டுக்கொள்வதில்லை. அது அவனது கடமை. அது போல தான் எழுத்தாளனும் தன் எழுத்தின் வழியாக மனிதர்களின் அடிப்படையான தேவைகளை நிறைவேற்ற முயலவேண்டும் என்று பாப்லோ நெருதா என்ற கவிஞர் சொன்னது தான் நினைவில் தோன்றியதே.
வள்ளலாரின் கனவு தமிழ்வாழ்விற்கான அறத்தை முன்வைப்பது. அன்பை வெறும் பிரசங்கமாக மட்டுமில்லாது செயல்முறையாக மாற்றி காட்டியது. வடலு¡ரில் உள்ள சத்திய ஞான சங்கத்தை சுற்றிவரும் போது என்னோடு வந்திருந்த நண்பர் கேட்டார் இங்கே சாப்பாடு இலவசமாக கிடைக்கிறது. ஆனால் அதற்கான தொகையை யாரோ செலுத்திவிடுகிறார்கள் தானே. அப்படியானால் பணம் தானே பிரதானமானது. சாப்பாடு என்றைக்கு பணமில்லாமல் கிடைக்கிறதோ அது தானே உண்மையான தானமாகயிருக்க கூடும். நியாயமான சந்தேகம் தான். காற்றைத் தவிர மற்ற யாவும் விலை நிர்ணயிக்கபட்டுவிட்டன. யாவும் வணிகமயமாகிப்போய்விட்ட நம்காலத்தில் எது அறம். எது தருமம். நாம் தண்ணீரையே விலை கொடுத்து வாங்கும் சூழலில் வாழ்கிறோம். இந்தச் சூழலில் அன்பையும் கருணையும் எப்படி வெளிப்படுத்துவது? அடிப்படை நம்பிக்கைகளே கைவிடப்பட்டுவரும் சூழலில் அறத்தின் செயல்பாடு எத்தகையதாகயிருக்க முடியும்? இக் கேள்விகளுக்கு தீர்மானமாக பதில் இல்லை ஆனால் மனித நம்பிக்கைகள் நிருபணத்திற்கு அப்பாற்பட்டது. அது மனிதர்களின் உயர்குணங்களை முன்வைத்து எதிர்பார்க்கிறது.
தனக்கு கிடைப்பதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது என்பது ஜீவராசிகள் யாவற்றிருக்கும் பொதுவான வழிமுறை. நிலத்தடியில் ஒடும் தண்ணீரை ஒரேயொரு வேப்பமரம் மட்டும் உறிஞ்சிக் குடித்துக் கொள்வதில்லை. காகம் கைப்பிடி சாதத்தைக் கூட கரைந்து காகங்களை அழைத்துத் தான் சாப்பிடுகிறது. இப்போதும் நாம் நமது பிறந்த நாள். திருமண நாட்களில் மிகச் சிறப்பாக நினைப்பது விருந்தை மட்டும் தான். நல்ல உணவளிப்பது தான் நமது அன்பின் பிரதான வெளிப்பாடாகயிருக்கிறது. ஆயிரம் வார்த்தைகளை விடவும் ஒரு பிடி சோறு அதிக நெருக்கம் உண்டாக்கிவிடக்கூடியது.
ஒரு கலாச்சாரத்தை தீர்மானிப்பதில் முக்கியபங்கு வகிப்பது உணவு தான். உணவின் சரித்திரத்தை ஆராயும் போது நாகரீகத்தின் மறுபக்கத்தை அறிய முடிகிறது
வள்ளலாரின் செயல்பாடுகள் பசியை போக்குவதற்கு அறச்சாலை அமைப்பதோடு மட்டுமின்றி உடலை பேணுவதற்கான மருத்துவம், யோகம், சித்தி என விரிந்த நிலையில் செயல்பட்டுள்ளது. அவரது கடிதங்களை வாசிக்கும் போது அவர் எதிர்கொண்ட பிரச்சனைகளும் அதற்கான அவரது எதிர்வினையும் ஈடுபாட்டோடு வாசிக்கத் தூண்டுகின்றன. வள்ளலாரின் கையெழுத்தில் அவை பிரசுரிக்கபட்டுள்ளன. தேவைப்படுகின்றவர்கள் இந்த முகவரியில் பெற்றுக் கொள்ளலாம் (திருஅருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம். வடலு¡ர் 607303 தொலைபேசி. 0414 * 259250. விலை நாற்பது ரூபாய்.)
ஜீவகாருண்யம் எனும் கருணை தான் அவரது நெறிகளில் பிரதானமானது. உலகமே இன்று அந்தக் கருணையை தான் தனது முக்கிய குரலாக உரத்து வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. குறிப்பாக யுத்தமும் வதைகளும் வேதனைகளும் நிரம்பிய சமகால வாழ்வில் நாம் கருணையை முற்றிலும் விலக்கி வருகிறோம். புதுமைபித்தன் ஒரு கட்டுரையில் கருணை என்பது கிழங்கின் பெயராக மட்டுமே எஞ்சிவிட்டது என்று எழுதியது தான் நினைவுக்கு வருகிறது.
சத்திய ஞானசபையின் பிரம்மாண்டமான அந்த தியானவெளியில் கண்களை மூடிக்கொண்டிருக்கும் போது பிரகாரத்தில் அமர்ந்தபடி ஒரு முதியவர் நடுங்கும் குரலில் திருஅருட்பாவை பாடுவது கேட்கிறது. புறாக்கள் எங்கிருந்தோவிம்முகின்றன. தமிழ்நாட்டின் ஏதோவொரு மூலையில் அமைதியாக நடந்துவரும் இந்த அறச்சாலை நூற்றாண்டுகளைக் கடந்தும் தன்னளவில் சேவையைத் தொடர்ந்து கொண்டுவருகிறது
விடுமுறை நாட்களில் மிருகக்காட்சிசாலைகளையும். பத்தடுக்கு வணிகமையங்களையும். கேளிக்கைப் பூங்காக்களையும் காண்பதற்கு நம் குழந்தைகளை குடும்பத்தை அழைத்து போவதை விடவும் சந்தர்ப்பம் கிடைக்கும் போது ஒரு முறை வடலூருக்கு பயணம் செய்து இந்த சத்திய ஞானசபையை அறிமுகப்படுத்தினால் அது பரஸ்பர அன்பை வளர்ப்பதோடு உலகத்தோடு தான் கொள்ள வேண்டிய உறவையும் குழந்தைகளுக்குப் புரிய வைக்க கூடும்.
வாழ்வை அர்த்தப்படுத்துவது எப்போதுமே நம் கையில் தானிருக்கிறது. பலநேரங்களில் அதை நாம் மறந்துவிடுவது தான் நமது இன்றைய பலவீனம்.
- எஸ்.ராமகிருஷ்ணன்
Tuesday, January 1, 2008
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
இந்த சிறந்தப் பதிவு முத்தமிழில் மீள்பதிவு செய்யப்படுகிறது.
நன்றி முபாரக்
எஸ்ரா.
நானும் ஒரு விடுமுறையில் அது ஒரு 10-ஆண்டுகளக்கு முன்பு வடலூர் போய் வள்ளலாளர் ஞானசபைக்கு சென்றுவந்த அந்த இனிய நினைவகளை நினைவூட்டியது இப்பதிவு.
'கடவுளை மற மனிதனை நினை' என்ற வள்ளாலாரை சோதி தின்ற அந்த சோகம் நெஞ்சைவிட்டு அகலவில்லை. கருணையை முற்றுமுழுதானதாக முன்வைத்த வள்ளலார் இன்று முன்னெடுக்க வேண்டிய ஒரு முக்கிய மனிதநேயவாதி. மதம் என்கிற பெயரில் நிகழும் வன்மறைக்கு ஒரு சிறந்த மாற்றாகக் கூடியது அவரது தனிப்பெருங்கருணை.
மீள்பதிவிற்கு பாராட்டுக்கள்.
Post a Comment