Tuesday, January 15, 2008

சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம் - பகுதி 2

Hunger in the world of plenty - Part 2

சென்ற பகுதியை படித்துவிட்டு தொடரவும்.

நெடும்பசி (Chronic Hunger)

இன்றைய தேவையானது இன்றே தீர்க்கப்படவேண்டும், நாளைக்கு ஒத்திவைக்க இயலாத, ஒத்திவைக்கக் கூடாத ஒரே பிரச்சினை பசிதான். பட்டினிப் பசியானது நெடிய, கடுமையான, தீவிர பரிமாணங்களைக் கொண்டது. நெடும்பசி ஏற்படுத்தும் சமூகவியல் மாற்றங்கள் மனிதகுலத்தின் மீது தீவிரமான தொடர்ந்த அழிக்க முடியாத பாதிப்புகளை பெரிய அளவில் ஏற்படுத்தக் கூடியது.

பல்வேறு தேசங்களின், ஒன்றுக்கொன்று முற்றிலும் வேறுபட்ட கலாச்சாரப் பிண்ணனியையும், பண்பாடுகளையும், பழக்கவழக்கங்களையும் கொண்ட மக்களின் உணவு வகையானது இன்று ஒரே இடத்தில் கிடைக்கக் கூடியதாகவும், வணிகவிருத்தியின் அடையாளமாக உணவுத் திருவிழாக்களும், விதம்விதமாய், பல்வேறு வகையான, ருசியான உணவுகளை தேடித்தேடி வாங்கி உண்ணுவது நாகரீகத்தின் அன்றாடமாகிவிட்ட ஒரு காலத்தில், லட்சக்கணக்கான பணத்தைச் செலவு செய்து விருந்து உபசாரங்களும் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில், தொடர்புகளும், சாதனங்களும் மிகவும் நவீனமயமாகிவிட்ட ஒரு சூழலில் இன்னும் கோடிக்கணக்கான மக்கள் ஒவ்வொரு நாளும் பசியடக்குவதற்கு உணவில்லாமல், உற்பத்தி செய்ய வழியறியாது, வசதிகளில்லாமல், எல்லோருடைய கவனத்துக்கும் எட்டாது இருக்கிறார்கள் என்பது துரதிருஷ்டமானது. கொடுமையானது.

கஞ்சி குடிப்பதற்கிலார் - அதன்
காரணங்கள் இவையென்ற அறிவுமிலார்
பஞ்சமோ பஞ்சம் என்றே - நிதம்
பரிதவித்தே உயிர் துடிதுடித்துத்
துஞ்சி மடிகின்றாரே - இவர்
துயர்களைத் தீர்க்கவோர் வழியிலையே
நெஞ்சு பொறுக்குதிலையே ....
(பாரதியார் - நொண்டிச் சிந்து)


இன்னும் துல்லியமாக...
உலகளவிலும், தேசிய அளவிலும், பிராந்திய அளவிலும் போதுமான, தேவையான உணவுற்பத்தியும், சேமிப்பும் இருந்தும் உணவுத்தேவையுடைய ஏழை மக்களுக்கு அது கிடைப்பதில்லை. உலகின் ஒட்டுமொத்த 640 கோடி மக்களுக்கும் தேவையான உணவு இவ்வுலகில் இருக்கிறது, உற்பத்தி செய்யப்படுகிறது இருந்தும் மக்களில் ஏழில் ஒருவர் பட்டினியாகவே இருக்கிறார். அதில் அதிகம் குழந்தைகள்தான். மூன்றில் ஒரு குழந்தை குறைவான எடையுடையதாக பிறக்கிறது, பின்னர் ஐந்து வயதாவதற்குள் இறக்கிறது. ஏன்? (Hunger in the world of Plenty)

நெடும்பசி நீடித்திருக்க முக்கிய காரணிகளாவன,




இயற்கை:
வெள்ளம், புயல், தட்பவெப்ப மாற்றங்கள், நீண்டகாலமாக பருவமழை பொய்த்துவிட்டதால் ஏற்படும் வறட்சி போன்ற இயற்கையின் காரணிகளால் ஏழை நாடுகளிலும், வளர்ந்துவரும் (??!!) நாடுகளிலும் நெடும்பசி ஏற்படுகிறது. உலகின் தற்போதைய நிலவரத்தின் படி வறட்சிதான் நெடும்பசி ஏற்பட முக்கிய காரணமாக இருக்கிறது. 2004 ம் ஆண்டில் ஏற்பட்ட கடும் வறட்சியால் எத்தியோப்பியா, எரித்திரியா, சோமாலியா, உகாண்டா, கென்யா ஆகிய நாடுகளின் பெரும்பான்மையான மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து நெடும்பசியால் பாதிக்கப்பட்டுள்ளனர். எத்தியோப்பியாவிலும், கவுதமாலாவிலும் பருவமழை பொய்த்ததன் விளைவாக சேமிப்பு விதை, விவசாயக் கருவிகளையும் விற்று பட்டினியைப் போக்கிக் கொண்டாலும், தொடர்ச்சியான பஞ்சத்தால் நெடும்பசிக் கொடுமைக்கு தள்ளப்பட்டார்கள்.
நம் அருகிலுள்ள உதாரணமாக கடந்த நான்கு ஆண்டுகளாக பருவ மழை பொய்த்தும், மிகைத்தும், தாமதித்ததின் காரணத்தாலும், காவிரி நீர்ப்பாசன பகுதியில் ஏற்பட்ட பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் அவலங்களும், துயரங்களும் இன்னும் வெளியில் துல்லியமாய் தெரியவில்லை, அல்லது அரசியல் காரணங்களால் தெரிவிக்கப்படவில்லை.




போர்:
உள்நாட்டுப் போர்களாலும், ஆயுதம் தாங்கிய போராட்டக்காரர்களாலும், சர்வாதிகார கொடுங்கோல் ஆட்சியாலும் உணவுப் பொருட்கள் தடுக்கப்பட்டு, உணவு மறுக்கப்பட்டு நெடும்பசிக்கு ஆளாகும் மக்கள் கூட்டம் கொஞ்சமல்ல. ஆசியாவிலும், ஆப்ரிக்காவிலும், லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் லட்சக்கணக்கான மக்கள் தம் வாழ்விடங்களிலிருந்து விரட்டப்பட்டு, சிதறடிக்கப்பட்டு நெடும்பசியின் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். கடந்த 2004ம் ஆண்டில், உணவுற்பத்திக்கு பஞ்சமில்லாத சூடானின் டர்பூர் பிராந்தியத்திலிருந்து மட்டும் பத்து லட்சம் மக்கள் உள்நாடு ஆயுதக் கலகக்காரர்களால் இடம்பெயர்க்கப்பட்டு, கொடும் பாலைவனத்தில் இப்போதும் ஐ.நாவின் அகதி முகாம்களில் பசியோடு போராடிக் கொண்டிருக்கிறார்கள். (இன்னும் உதாரணங்கள்: ருவாண்டா, காங்கோ, ஈராக், ....) மேலும் போர் காலங்களில், கலவர காலங்களில் உணவும் ஆயுதமாகிவிடும். கலவரக்காரர்களாலோ, ராணுவத்தினராலோ உணவு சேமிப்புக் கிடங்கும், விநியோக ஏற்பாடுகளும், சந்தைப் பகுதிகளும் தடுக்கப்பட்டு அல்லது அழிக்கப்பட்டு கத்தியின்றி, ரத்தமின்றி, கத்தக் கூட திராணியின்றி பட்டினியால் மக்கள் அழித்தொழிக்கப்படுவார்கள். விவசாய நிலங்களிலும், பாசனக் கிணறுகளும், ஏரிகளும் அழிக்கப்பட்டு அல்லது கன்னி வெடி புதைக்கப்பட்டும் அப்பிராந்தியத்தின் நெடும்பசிக்கு ஏற்பாடு செய்யப்படும் . அமைதியான பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களும் இதன் தொடர்ச்சியாக பாதிக்கப் படுவார்கள் (கானா, மலாவி..).



அரசின் பொருளாதாரக் கொள்கை
நவீன உலகில் அப்பாவி மக்கள் மீதான சகிக்க முடியாத, ஏகாதிபத்திய வன்முறையில் ஒன்றான பொருளாதாரத் தடையாலும், மக்களின் தேவையை கருத்தில் கொள்ளாமல், ஆராயாமல் அமலாக்கப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களால், தோல்வியைத் தழுவிய பொருளாதாரக் கொள்கைகளால் நெடும்பசிக்கு ஆளாகும் மக்கள் கூட்டமும் கொஞ்சமல்ல. (அர்ஜெண்டினா, ஈராக், இந்தியா)




ஏழ்மை:
விதைப்பதற்காக வைத்திருக்கும் நெல்லைக் கூட விற்றுத் தின்னும் அளவுக்கு வறுமை, பசி, குடும்பத்தினரின் பட்டினியோடு அல்லாடிக் கொண்டிருக்கும் ஓர் அப்பாவி ஏழை விவசாயி இயற்கையும், சமூகமும், அரசும், அரசியலும், அக்கம் பக்கமும் ஏமாற்றிவிட என்ன செய்வான் நெடும் பசிக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்வதைத் தவிர? நவீன விவசாய உபகரணங்களையோ, புதிய தொழில்னுட்பத்தையோ வாங்க வழியற்றவர்களால் எப்படி எல்லாவற்றையும் எதிர்த்துப் போராடி வெற்றி பெற முடியும்? இன்னும் நிலமற்றவர்கள், நீர்ப்பாசன வசதியற்ற பகுதிகளில் இருக்கும் விவசாயக் கூலிகள், தொழில் நுட்ப அறிவற்ற ஏழைகள் என்ன செய்ய முடியும், கிடைக்கும் கூலிக்கு உண்டு உயிர்காக்க போராடிக் கொண்டிருப்பதைத் தவிர? ஏழ்மையில் சிக்கித் தவிக்கும் மக்கள் அவர்களுக்கான உணவையோ, குடும்பத்திற்கான உணவையோ வாங்கும் அல்லது உற்பத்தி செய்து கொள்ளும் திறனை இழந்துவிடுகிறார்கள். பட்டினியின் காரணமாக மேலும் மேலும் பலமிழந்து, நலமிழந்து நோய்வாய்ப்படுகிறார்கள். சுருக்கமாக, ஏழைகள் பட்டினிக்கு ஆளாகிறார்கள், அவர்களது ஏழ்மை மீண்டும் அவர்களை ஏழ்மைக்குள் தள்ளுகிறது.


தொடரும்....

3 comments:

குகன் said...

முபாரக் tamilbookreview.blogspot.com தந்ததற்கு மிகவும் நன்றி...

குகன் said...

முபாரக் tamilbookreview.blogspot.com வருகை தந்ததற்கு மிகவும் நன்றி...

குகன் said...

ருசிக்காக சாப்பிடுவர்களின் மத்தியில் பசிக்கு சாப்பிடுபவர்களை காட்டியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்...