Tuesday, January 8, 2008

சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்


Hunger in the World of plenty



உணவு:
உயிரினங்களின் அத்தியாவசியத் தேவைகளில் முதன்மையானதும் முக்கியமானதுமாகும். உடலின் எரிபொருள். எல்லா உயிரினங்களின் வாழ்விலும் நலனிலும் பெரும்பங்கு வகிப்பது; மனிதகுலத்தின் எல்லா ஏற்றங்களுக்கும் காரணமாகவும், நலவாழ்விலும், சமூக நல்லிணக்கத்திற்கும் காரணமாக இருப்பது, மனிதனை உருவாக்குவது அவன் உருவம், உயரம், அழகு, உள்ளம் யாவற்றையும் உருவாக்கவும் மாற்றவும் வல்லது. நலத்தையும், பலத்தையும் தரவல்லது மக்கட் பிறப்பை பெருக்குவதிலும், கட்டுப்படுத்துவதிலும் இது ஆற்றும் பங்கு மிகப்பெரிது. உள்ளத்தின் உயர்வையும் உடலின் திறனையும் பெருக்க வல்லது. மனித நாகரீகத்திலும் பண்பாட்டிலும் இது பெரும் பங்கு வகிக்கிறது.

பசி என்பது என்ன?

உணவின் தேவையை உணர்த்தும் ஏற்பாடு. உடலியக்கத்தின் ஆதார எரிபொருள் தேவைக்கான சமிக்கை. சக்தி தேவையின் பொருட்டு உடனே உண்ணச் சொல்லும் உடலின்/உள்ளுணர்வின் உந்துதல், உண்ணாமல் இருக்கும் போது நம்மால் (மூளையால், மனத்தால், உடலால்) உணரப்படுவது. மேலும் உணவு தவிர்த்து வேறு வகையான உணர்வுகளுக்காகவும், ஆசைகளுக்காகவும் ஏங்குவது. (காதல், இலட்சியம், காமம், புகழ்....இன்னும் பிற) என்றும் அறியப்படும்
ஏதேன் தோட்டத்தில்
ஏவாள் இல்லாமல் கூட
ஆதாம் வாழ்ந்திருக்க முடியும்
ஆனால் ஆப்பிள் இல்லாமல்
ஒரு நாள்கூட
உயிரோடிருந்திருக்க முடியாது

ஜென் கதையொன்று...
ஆற்றின் இரண்டு கரைகளில் இரு துறவிகள் இருந்தனர். வலதுபுறமிருந்த கரையிலிருந்த துறவி தண்ணீரில் நடந்து காட்டக் கூடியவர். காற்றில் எழுதிக்காட்டக் கூடியவர். இடது புறமிருந்த துறவிக்கு இது போன்ற சித்துகளும் எதுவும் தெரியாது அதனால் அவரிடம் சீடர்கள் வந்து சேர்வது கிடையாது. ஒரு நாள் புதிதாக ஒரு மாணவன் அவரிடம் வந்து சேர்ந்தான். அவன் ஆர்வத்துடன் நீங்கள் ஏன் மாயங்கள் செய்வதில்லை என்று கேட்டான். அதற்கு இடதுபுறமிருந்த துறவி தான் செய்யும் மாயங்களை மற்றவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டேன் என்கிறார்கள். உனக்காவது புரிகிறதா பார்ப்போம் என்றபடி. எனக்கு பசியெடுத்தால் சாப்பிடுகிறேன். சாப்பிட்டதும் பசி எங்கே போனது என்று மாயமாகயிருக்கிறது. அது போலவே தாகமாகயிருக்கும் போது தண்ணீர் குடிக்கிறேன். தாகம் எங்கே மறைந்தது என்றே தெரியவில்லை. இவை யாவையும் விட பெரிய மாயம். உறக்கம் வந்த போது நான் உறங்கிப் போய்விடுகிறேன் இந்த மொத்த உலகமே எனக்குத் தெரியாமல் மறைந்துவிடுகிறது. இதெல்லாம் மாயமில்லையா என்று கேட்டார். சீடனுக்கு அவரது அருமை புரிந்து அவரிடத்தில் தங்கிவிடுகிறான்.

(எல்லா இறைதூதர்களும் பசியைப் போக்குவதை தான் முதன்மையான அற்புதமாக நிகழ்த்தியிருக்கிறார்கள். பசியைப் பற்றி பேசாத மதமேயில்லை. பத்து பேர் உண்ணும் அப்பத்தை நூறு பேருக்கு பங்கிட்டு கொடுத்ததும். விருந்தில் தண்ணீரை திராட்சை ரசமாக்கியதும் கிறிஸ்துவின் அற்புதங்கள் என்றால் அதனடியில் பசியுணர்ச்சி தான் பிரதானமாகயிருந்திருப்பதை கவனிக்க வேண்டியிருக்கிறது. தனக்கு கிடைப்பதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது என்பது ஜீவராசிகள் யாவற்றிருக்கும் பொதுவான வழிமுறை. நிலத்தடியில் ஒடும் தண்ணீரை ஒரேயொரு வேப்பமரம் மட்டும் உறிஞ்சிக் குடித்துக் கொள்வதில்லை. காகம் கைப்பிடி சாதத்தைக் கூட கரைந்து காகங்களை அழைத்துத் தான் சாப்பிடுகிறது. இப்போதும் நாம் நமது பிறந்த நாள். திருமண நாட்களில் மிகச் சிறப்பாக நினைப்பது விருந்தை மட்டும் தான். நல்ல உணவளிப்பது தான் நமது அன்பின் பிரதான வெளிப்பாடாகயிருக்கிறது. ஆயிரம் வார்த்தைகளை விடவும் ஒரு பிடி சோறு அதிக நெருக்கம் உண்டாக்கிவிடக்கூடியது. ஒரு கலாச்சாரத்தை தீர்மானிப்பதில் முக்கியபங்கு வகிப்பது உணவு தான். உணவின் சரித்திரத்தை ஆராயும் போது நாகரீகத்தின் மறுபக்கத்தை அறிய முடிகிறது - எஸ்.ராமகிருஷ்ணன், தீராப்பசி)

பொதுவாக பசியென்றால் சாப்பிடனும் என்றோ, இன்னும் சாப்பிடவில்லையே என்பது மட்டுமே நம் நினைவுக்கு வரும். இதற்கப்பாலும் பல கூறுகள் பசியில் உண்டென்பதை பெரும்பாலோர் அறியமாட்டார்கள். பசி என்பது பல்வேறு தன்மைகளையும், தேவைகளையும் உடையது. மருத்துவத்துறையினராலும், சமூகவியல் ஆய்வாளர்களாலும் கீழ்க்கண்டவாறு பட்டியலிடப்படும்.
1) கடும்பசி (Acute Hunger)
2) நெடும்பசி (Chronic Hunger)
3) தனிப்பசி (Specific Hunger)
4) சமச்சீர் உணவுப்பசி (Multiple Hunger)
5) ஊட்டச்சத்துப் பசி (Mal Nutritional Hunger)
இப்படிப்பட்ட பசி நிலைகளால் உலகில் வாடுவோர் 75% உள்ளனர். இந்தியாவில் மட்டும் 90% மக்கள் (அனைத்துவகை) பசிகளுக்கு அடிமையாய் உள்ளனர்.
1) கடும்பசி (Acute Hunger)
உயிர் வாழ இப்பசியை அடக்குதல் வேண்டும். அன்றாடம் உணவு தேவைப்படும் அத்தியாவசியத்தை உணர்த்தும் பசி. உணவு அளவில் குறையும்போது ஆற்றல் குறைந்து எதுவும் செய்யமுடியாமல் ஒடுங்கும் நிலை ஏற்படுகிறது. இதைத்தான் பாரதி சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம் வெறுஞ்சோற்றுக்கோ வந்ததிந்தப் பஞ்சம் என்றான். உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்றும் குறிப்பிட்டது இப்பசியைத்தான். கூழோ, கஞ்சியோ, ஹம்பர்கரோ, வளர்க்கும் குரங்கையோ*, எதையாவது...எதையாவது தின்று அடக்கவேண்டிய பசி.
* 7 ஆண்டுகளுக்கு முன்பு உத்திரப்பிரதேச மாநிலத்தில் கிராமப்புறங்களில் ஏற்பட்ட கடும் பஞ்சத்தின் காரணமாக, கிராம மக்களில் பெரியவர் ஒருவர் தான் வளர்த்த குரங்கைக் கொன்று தின்று விட்டார் என்றும், இன்னும் சிலர் விஷத்தன்மை வாய்ந்தது என்று தெரிந்தும் ஒருவகைக் கிழங்கை வேறுவழியின்றி உண்டு சில நாட்களில் இறந்திருக்கிறார்கள் என்றும் இந்தியா டுடே இதழில் வந்த கட்டுரையில் படித்தேன்.



2) நெடும்பசி (Chronic Hunger)

பஞ்சத்தினாலும், இயற்கையின் சீற்றங்களாலும், ஏமாற்றங்களாலும், உணவுற்பத்திக்கு தேவையான அத்தியாவசிய கட்டமைப்பின் குறைவினாலும், சமூக அமைப்பின் சுரண்டல்களாலும், போர், அகதியாக்கப்படுதல் போன்ற சமூகப்பிரச்சினைகளாலும் நீண்டகாலமாக நிர்ப்பந்தமான பட்டினியால் ஏற்படும் பசி.
WHO வின் 2004ம் ஆண்டறிக்கையின் படி, ஒவ்வொரு நாளும் , 800 மில்லியன் மக்கள் பசியோடு உறங்குகிறார்கள், நீண்டகாலமாக நிர்ப்பந்தமான சத்துக்குறைவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும் ஒவ்வொரு பருவகால மாற்றத்தின் போதும் ஏற்படும் உணவுப் பற்றாக்குறையால் வாடுகிறார்கள். பசியாலும், ஊட்டச்சத்துக் குறைவாலும் ஏற்படும் நேரிடையான அல்லது மறைமுகமான பாதிப்பால் ஒவ்வொரு வருடமும் 7 மில்லியன் குழந்தைகள் 5 வயதை அடையுமுன்பே மரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னும் ஒருமணி நேரத்தில் உலக மக்கள் தொகை எண்ணிக்கையில் சராசரியாக 8,300 பேர் சேர்ந்து கொள்வார்கள். நாளை இந்நேரம் இன்னும் 2 லட்சம்பேருக்கு உணவு தேவைப்படும். இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் அதன் தனிதன்மையான தேவைகளோடு இருப்பவர்கள்தாம், இவ்வுலகின் பிரஜையாக இருப்பதற்கு நம்மைப் போலவே எல்லா அடிப்படை உரிமைகளும், அத்தியாவசிய தேவைகளும் உடையவர்கள்தாம். ஆனால், பரிதாபம் முறைகெட்ட சமூக அமைப்பாலும், அவர்களின் அத்தியாவசிய வாழ்வாதாரங்களைப் பகிர்ந்தளிக்காத சுரண்டல் மிகுந்த, ஏற்றத்தாழ்வுமிக்க வாழ்வமைப்பாலும் நிராகரிக்கப்பட்டவர்களாக செத்து மடிகிறார்கள். உலகின் வளங்களை எல்லாம் வெறும் இரண்டு விழுக்காட்டினர் சுயநலம் மிகுந்த அரசியல், சமூகப்பொருளாதார கட்டமைப்பால் பயன்படுத்திக் கொண்டு, மீதமுள்ள 98 % மக்களை ஏதேனும் குறையுள்ளவர்களாக விட்டுவிட்டனர்.



உணவுசார் தேவைகளை மதிப்பீடு செய்யும் உலக நலவாழ்வு அமைப்பின் (WHO) வல்லுனர்களின் அறிக்கைகளின் படி, ஒவ்வொரு ஆண்டும் 73 மில்லியன் மக்கள் இப்புவியில் மக்கட்தொகையில் இணைந்து கொள்கிறார்கள். அனைவருக்கும் தேவையான உணவுற்பத்தி நடைபெற்றுக் கொண்டுதானிருக்கிறது, ஆனால் பெரும்பான்மையான, தேவையுள்ள (சுமார் 850 மில்லியன்) மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதில்லை என்பது நிதர்சனமான, வருத்தத்திற்குறிய உண்மை. இதில் 95 விழுக்காட்டினர் வளர்ந்து வரும் நாடுகளில் உள்ளனர். வளர்ச்சியடைந்த நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் உபரியான உணவுப்பொருட்கள் வளர்ந்து வரும் நாடுகளின் உணவுத்தேவையுள்ள பெரும்பான்மை மக்களுக்கு சென்று சேரும் ஏற்பாடுகள் இன்னும் சரிவரச் செய்யப்படவில்லை. குறிப்பாக இந்தியாவில் மட்டும் வறுமைக்கோட்டின் கீழ் 46 கோடிக்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள்.
பசி மனித வாழ்வைச் சீர்குலைக்கிறது. மனித வரலாற்றின் தொடக்க காலத்திலிருந்தே இது தன் ஆதிக்கத்தைத் தொடங்கியுள்ளது. தன்னலமும், சுரண்டலும் இதை வளர்த்தன.
நெடும்பசியானது மனித இயல்பைச் சிதைக்கும், வலிமையைக் குறைக்கும். பசியினால் எழும் உணவு வேட்கையால் மனிதன் தன்னை மறந்து எதையும் செய்யத்துணிவான். இதனால் அன்பு, அறம், கடமை, பண்பாடு போன்றவற்றை இழக்கவும் யோசிக்கமாட்டான். கொலை, களவு, பூசல், சோம்பல், சோரம்போதல் ஆகிய அனைத்திற்கும் இப்பசியே அடிப்படை. பசி வந்திடப் பத்தும் பறந்துபோகும் என்று இதையே குறிப்பிட்டனர்.

(பசி தான் மனிதனின் சகலகுரோதங்களுக்கும் மூலவேர். பசியோடிருப்பவன் எந்த நியாயத்திற்கும் கட்டுப்படமாட்டான். குற்றவாளிகளுக்கு கூட வேளைக்குவேளை சரியாக உணவு வழங்கப்படுகிறது. நம் உடல் தான் நமக்கிருக்கும் ஒரே சாதனம். மனிதன் இருவகைப் பசியால் பீடிக்கப்பட்டிருக்கிறான். உடல் தன்னை வளர்த்துக்கொள்வதற்கு வயிற்றுப் பசியை உருவாக்குகிறது. இன்னொன்று தன்னை போல இன்னொரு உடலை உற்பத்தி செய்வதற்கு காமத்தை இரண்டாம் பசியாக உருவாக்குகிறது. பசியோடு இருப்பவன் காமத்தை விடவும் வயிற்றை நிரப்புவதில் தான் அதிக நாட்டம் கொள்வான் - எஸ்.ராமகிருஷ்ணன், தீராப்பசி)
(தொடரும்...)

நன்றி:
மருத்துவ ஆசான் ஐயா த.ச.ராசாமணி, மதுரை
மனிதனை நலமாக்குவது ஹோமியோபதி - மாத இதழ், மதுரை
(ஜென் கதையும், அடைப்புக்குறிக்குள் இருக்கும் பத்திகளும் - எஸ்.ராமகிருஷ்ணனின் தீராப்பசி கட்டுரையிலிருந்து - அட்சரம்)
எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் - அட்சரம், காலாண்டிதழ்
புள்ளிவிபரங்கள்:
http://www.who.org (World Health Organization)
http://www.wfp.org (World Food program)
http://www.bread.org (Bread for the world)
http://www.fao.org/es/ess/mdg_kit/pdf/India_e.pdf Food and Agricultural Organization (UN)
http://www.iies.su.se/publications/seminarpapers/699.pdf Institute for International Economic Studies (Stockholm University
www.google.com search engine ("hunger facts")
_______________________
பின்னுரையாக.....
சமீபகால பத்திரிக்கைச் செய்திகளும், தொலைக்காட்சி ஆவணப்படங்களும் உலகின் பல்வேறு பகுதிகளில் நிலவும் நீண்டகால பட்டினியால் வாடும் மக்கள் கூட்டத்தை நம் கவனத்துக்கு கொண்டுவந்து கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் கூட காவிரிப் பாசனப் பகுதியில் வாழும் விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து, உண்ணுவதற்கு வழியறியாமல், குடும்பத்தின் பசியை போக்க வழியறியாதவர்களாகவும், கடன் தொல்லைகளாலும் தற்கொலை செய்து கொண்டு மாண்டு கொண்டிருக்கிறார்கள் எனும் செய்தி வந்தவண்ணமிருக்கிறது.

பிச்சைக்காரர்களுக்கு உணவளித்தால், உதவி செய்தால் உழைக்காத ஒரு கூட்டத்தை உற்பத்தி செய்துவிடுவோம் என்று முற்போக்காய் எண்ணிக்கொள்கிறோம். மேற்கோள் காட்டுகிறோம், புள்ளிவிபரங்கள் சேகரிக்கிறோம். இப்படித்தான் அவனுக்கு பாவப்பட்டு சோறு வாங்கிக் கொடுத்தேன், அவன் என்னடான்னா என் பர்சை அடிச்சிக்கிட்டு போய்ட்டான்" உதாரணக் கதை சொல்கிறோம்.

இரக்கமற்று நீளும் வறுமையின் கரத்தை ஒடுக்காதவரை நாம் ஒருபோதும் சமதர்ம, சமத்துவ, அமைதியான ஒரு சமூக வாழ்வை கற்பனையில் மட்டும்தான் காணவேண்டி வரும். ஒருவேளை கற்பனையில் கூட காண முடியாத சமூகச் சூழல் வெகுவிரைவில் வரலாம்.
நம் தமிழ்ப்பாட்டனார் வள்ளுவரின் குறள் மொழிகளிலிருந்து,
பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது (227)
-பட்டினி எனச்சொல்லி வந்தவரின் பசியைத் தீர்ப்பது வீண்போகாது. தான் தேடிய பொருளைப் பிற்காலத்தில் உதவுவதற்கு ஏற்பச் சேமித்து வைக்கக் கூடிய கருவூலமாகும்
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி (226)

-பசியைப் பொறுத்துக் கொள்ளும் நோன்பைக் கடைபிடிப்பதைவிட பசித்திருக்கும் ஒருவருக்கு உணவு அளிப்பதே சிறந்ததாகும்

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை (322)
-இருப்போர் இல்லாதோர் என்றில்லாமல், கிடைத்ததைப் பகிர்ந்துகொண்டு, எல்லா உயிர்களும் வாழவேண்டும் என்ற சமநிலைக் கொள்கைக்கு ஈடானது எதுவுமே இல்லை.

எல்லோருக்கும் அவரவர் விருப்பம் போல் வாழவேண்டும் என்று ஆசை இருக்கிறது, எங்கேனும் சமூகத்தில் நம் அமைதியான வாழ்விற்கு பங்கம் விளைவிக்கும் ஏதாவதொன்று நடந்தால் எல்லோரும் ஒவ்வொரு மற்றவரை குற்றம் சொல்கிறோம், விவாதம் செய்கிறோம், மனதின் கோபங்களை, ஆத்திரங்களை, சமூக விமரிசனங்களை, குமுறலை, கவிதையில், எழுத்தில் பதிவு செய்கிறோம். அத்தோடு நம் கடமை முடிந்துவிட்டதா???
சமூகப்பாத்திரத்தில் நமக்கான இடத்தை மனசாட்சியின் ஒப்புதலோடு, சம்மதத்தோடு குறைந்தபட்ச நேர்மையோடு நிறைவாக்கிவிட்டோமா?
நமக்கெல்லாம் உறைக்கவேண்டும் என்பதற்காக,
வயிற்றுக்குச் சோறிட வேண்டும்
இங்கும் வாழும் மனிதர்க்கெல்லாம்....
- என்று பட்டினிப் பசியின் கொடுமையை அனுபவித்து உணர்ந்த பாரதி எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கிறான்.
நாம் உண்மையில் என்ன செய்கிறோம்? நாம் பட்டினியின்றி சுகமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் அதனால்தான்...

- சிவாஜி 200 கோடிக்கு விற்பனையானதைப் பற்றிச் சிலாகித்துக் கொண்டிருக்கிறோம்.
- நயந்தாராவின் இடுப்பில் சதை வைத்துவிட்டது நமக்கு கவலையாய் இருக்கிறது
- ......................................

இன்னும் .................. நிறைய சொல்லலாம்
நாம் பாரதியை மட்டுமல்ல, காந்தியை மட்டுமல்ல, வள்ளுவரை, புத்தரை, ஏசுவை, நபியை இன்னும் என்னெவெல்லாமோ படிக்கிறோம். சிந்திக்கிறோம் அல்லது அப்படி எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஏதேனும் செய்கிறோமா? சிந்திக்க வேண்டும், உண்மையாய் சிந்திக்க வேண்டும். ஏதேனும் செய்யவேண்டும்.

3 comments:

Anonymous said...

சோதனைப் பின்னூட்டம்

ஜமாலன் said...

பசி குறித்த இப்பதிவு அதன் அறிவியல் தளங்களை மட்டுமின்றி சமூக பொருளாதாரத் தளங்களையும் தொட்டுச் செல்கிறது. சிந்திக்க வைக்கும் உண்ர்வுபூர்வமான பதிவு.

பசி மற்றும் பாலுந்தம் மனித உடலின் அடிப்படை இயல்பூக்கமாகும். பாலுந்தம்கூட கட்டுப்படுத்திக்கொண்டு வாழலாம். ஆனால் பசியை. ஒரு உடலின் அடிப்படை இருத்தல் என்பது பசிதான்.

லவாய்சியர் என்கிற விஞ்ஞானி 'மெல்ல எரிதலே உயிர்த்தல்' என்றார். பல அர்த்தங்கள் நிரம்பிய இவ்வாசகம் பசி குறித்த விஞ்ஞானமுமாகும். உணவு உள்ளே எரிக்கப்படுவதே ஆற்றல் அதுவே உயிர்த்தலுக்கான அடிப்படை.

உலகின் எல்லா சிந்தனைகளும் தத்தவங்களும் அடிப்படையில் இதனையே தங்களது மொழியில் வெவ்வேறாக பேசுகின்றன. பசி குறித்த உங்களது ஆழந்த அவதானிப்புகளும் கவனமும் அவசியமான ஒன்று. தொடர்ந்து வெளியிட வாழத்துகிறேன். படிக்கவும் ஆவலாக உள்ளேன்.

முபாரக் said...

மிக்க நன்றி ஜமாலன்.