வணக்கம்
பால்ய காலந்தொட்டே, இன்னெதென்று வகைப்படுத்திச் சொல்லத் தெரியாத உணர்வொன்று எதை நோக்கியோ உந்திக்கொண்டே இருந்தது. அது காதலா, நேசத்திற்கான ஏக்கமா, சராசரியான தேவைகளின் ஆசைகளா என்னவென்று சுட்டிச் சொல்லிவிடமுடியவில்லை. அப்படித்தான் எண்ணத்தில் வருவதையெல்லாம் எழுதவேண்டும் என்ற எண்ணமும். காதல், நேசம் என்பது பரிணமிக்கக் கூடியது, காதல் என்பது பெண்களைத் தாண்டியும் வேறொன்றாக உருமாற்றம் அடையக்கூடியது என்பதை மெல்ல மெல்ல உணர்ந்து கொண்டோம். அல்லது அப்படி ஏற்றுக் கொள்ளக்கூடிய சந்தர்ப்பங்களையும், அனுபவங்களையும் வாழ்க்கை காலத்தின் இலையில் பரிமாறியது. பெண்கள் மீதும், காதல் சார்ந்த உணர்வுகள், பாடல்கள், எழுத்துக்கள் மீதுமிருந்த சாய்வு மனிதர்களின் மேல் ஏற்பட்டது. கட்டுப்படுத்த முடியாத காதலை தோலுரித்து சமூகத்தின் மீதான அக்கறையாய், மனித குலத்தின் மீதான மங்காத நேசமாய், பரிவாய் மாற்றிக் கொண்டது எதையோ அறிந்து கொண்ட நுட்பமான மனம்.
பொது அறிவாகட்டும், மருத்துவ அறிவாகட்டும், இலக்கிய அறிவாகட்டும் இன்னும் எல்லாவற்றிலும் நான் என்னளவில் குறைபாடுடைய, ஆனால் மேலும் மேலும் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆவலுடைய உயிரிதான்.
எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் சமூகம் சார்ந்த கருத்தியலில் என் பார்வை படிந்த, என் புரிதல் சார்ந்த நடைதான் இருக்கும். பொதுநன்மை கருதிய விமரிசனங்களை உடனுக்குடன் ஏற்றுக்கொள்வோம்.
பரந்த ஊடக உலகில் ஆவணப்படுத்தப்பட்டிருக்கும் பல்வேறு வகையான அமைப்பு, அரசு, இயக்கங்களின் திரட்டல்களிலிருந்து பயன்படுத்தப்பட்டிருக்கும் புள்ளிவிபரங்கள் சார்ந்த விமரிசனங்களுக்கு நான் மட்டுமே முழுப் பொறுப்பு ஏற்கமுடியாது. தார்மீக அடிப்படையில் தவறான தகவல்களுக்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்ளலாம். திருத்திக் கொள்ளலாம்.
பெரும்பான்மை வகிக்கும் ஆதிக்க கருத்தியலை, நவீன மருத்துவ நடைமுறைகளை, வலிமையான ஊடக சக்தியால் நம்மீது திணிக்கப்பட்ட மருத்துவம் சார்ந்த பிரமைகளை, மூன்றாவது கோணத்தில் உடைக்கும் ஏற்பாட்டுக்கான சிறுமுயற்சிதான் இது.
உடல், நலம், ஆரோக்கியம், நோயியல், நோய் நீக்குதல், உணவு, உடற்கூறு ஆகியன பற்றிய மாற்றுமருத்துவம் (ஹோமியோ, அக்குபஞ்சர்) முன்வைக்கும் கருத்துக்களையும், நடைமுறைகளையும், பயிற்சிகளையும், ஆலோசனைகளையும், தொகுத்து எழுதவேண்டும் என்ற எண்ணத்தோடுதான் எழுதப்படுகிறது.
எந்த ஒரு சித்தாந்தத்தையோ, கருத்தையோ, முடிவையோ வலியத் திணிப்பதற்காக எழுதப்படவில்லை. மாறாக, மக்களின் பக்கம் உங்களின் கவன ஈர்ப்புக்காகவும், உங்களின் நலனுக்காகவும், சமூக ஆரோக்கியத்திற்காகவும் தான்.
"எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல்
வேறொன்றுமறியேன் பராபரமே"
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
மாற்று மருத்துவம் பற்றிய தங்கள் கருத்துகளை அறிய ஆவலாயுள்ளேன்.
நண்பரே...
தொடராக உங்கள் கருத்துக்களை அறிய ஆவலாக உள்ளேன். மாற்று மருத்துவம் குறித்த கருத்தாக்கங்கள் அவசியம் வெளிப்படுத்த வேண்டியுள்ளது.
அற்புதமான கவிதைகளை தரும் உங்களால் மனிதநேயமிக்க மருத்துவ உண்மைகளயும் வெளிப்படுத்த முடியும்.
காத்திருக்கிறேன்.
அன்புடன்-
ஜமாலன்.
//மனித குலத்தின் மீதான மங்காத நேசமாய், பரிவாய் மாற்றிக் கொண்டது எதையோ அறிந்து கொண்ட நுட்பமான மனம்.// வெறும் வார்த்தைகள் இல்லையே முபாரக். நடத்துங்க. இந்த வலைப்பதிவையே இன்றுதான் முதல் முறையாக பார்க்கிறேன். உங்களுடைய முதல் பதிவு அசத்தல்.
நன்றி சுந்தர்,
உங்கள் ஆவலை ஓரளவேனும் பூர்த்தி செய்ய முயற்சிக்கிறேன்
//வெறும் வார்த்தைகள் இல்லையே முபாரக்//
வெறும் வார்த்தைகள் என்று எதுவும் இல்லையே.
நன்றி ஜெஸீலா
//உங்களுடைய முதல் பதிவு அசத்தல்//
எந்தப்பதிவ சொல்றீங்க?
அட இப்பவாவது எழுத தோன்றியதே!
வாழ்த்துகள் ராசா
ஆவலுடன் காத்திருக்கிறோம்.
Good post.
Post a Comment