Thursday, January 1, 2009

சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம் - பகுதி 4

Hunger in the world of Plenty - Part 3



முதன் முதலில் உலகில் உங்கள் பசிக்கு உணவளித்தது யார்? தன் உடற்கூறின் இயல்பிலமைந்த இயற்கையின் ஏற்பாட்டின் படி ஒரு மனிதனுக்கு உணவளிக்க யாரால் இயலும்? தாயால் அதாவது பெண்ணால் தான் முடியும்.

உலகின் முதல் உணவுற்பத்தியாளரும் பெண்தான். இத்தகைய போற்றுதலுக்குரிய, இயற்கையின் இயல்பிலேயே கருணையின் வடிவாய் இருக்கும் பெண்கள்தான் அதிகம் பட்டினியால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் எனும் கொடுமையான உண்மை தெரியுமா உங்களுக்கு? நடுங்கும் நெஞ்சத்தோடு, கலங்கிய கண்களோடு, தட்டச்ச இயலா தத்தளிப்போடு இக்கொடுமையை உங்களுக்குச் சொல்கிறேன். ஆம், கடும்பசியாலும், நெடும்பசியாலும் (Acute & Chronic Hunger) பாதிக்கப்பட்டவர்களில் பத்தில் ஏழுபேர், அனைவருக்கும் உணவளிக்கும் பெண்கள்தான் (சிறுமிகள் உட்பட). உலகின் ஒவ்வொரு மூலை முடுக்குகளிலும், அனைத்துக் கலாச்சாரங்களிலும், சமூக அமைப்புகளிலும் பெண்களே பட்டினியாலும், ஏழ்மையாலும் மிகவும் வன்மையாக பாதிக்கப்படுபவர்கள். நெடும்பசியின் காரணமாக, தீவிர ஊட்டச்சத்துக் குறைவால் குறிப்பாக இரும்புச்சத்துக் குறைவால் ஒவ்வொரு நாளும், ஆம் ஒவ்வொரு தினமும் 300 பெண்கள் பிரசவிக்கும் போது மரணித்துக் கொண்டிருக்கிறார்கள். (Anaemia எனும் இரும்புச் சத்துக் குறைவால் 25% ஆண்களும், 47% பெண்களும் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள்) பிரசவிக்கப் போகும் பெண்களும், பாலூட்டும் பெண்களும் சிறப்பான சத்துணவுத் தேவையுடையவர்களாய் இருக்கிறார்கள். பேறுகால சத்துக்குறைவும், எடைக்குறைவும் குறைப்பிரசவத்திற்கும் குறை எடைக் குழந்தைகள் பிறக்க முக்கியக் காரணமாகும். இதன் காரணமாகத்தான் உலகம் இப்போது பட்டினியால் வாடும் 84 கோடி மக்களை கணக்கெடுத்து வைத்திருக்கிறது.

இப்போது சொல்லுங்கள் பசியோடு, நெடும் பட்டினியோடு ஒருவர் இருந்து கொண்டே இருப்பது, ஒரு கோட்டைக் கடந்து போவது போல மிகவும் சாதாரணமான ஒன்றா???


பின்னுரையாக என்னுரை

நெடும்பசியால் அதிகம் பாதிக்கப்பட்ட மக்களைக் கொண்ட நாடானது உற்பத்தி திறன் குறைந்த மக்களைக் கொண்டதாக, பொருளாதார முன்னேற்றம், சமூக ஆரோக்கியம் பாதிக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது. நாட்டின் ஒட்டுமொத்த சமூகப் பொருளாதார முன்னேறமானது கோடிக்கணக்கில் மக்கள் தொகை இருந்தாலும், நாட்டின் மக்கள் சக்தியின் ஆற்றல் இல்லாத காரணத்தால்தான் பின்தங்கிவிடுகிறது. ஆக ஒரு தனி மனிதனின் நெடும்பசி என்பது அவனை மட்டும் பாதிப்பதல்ல, நுண்ணிய சமூகத் தளங்களிலும், சமூக ஒழுக்க அமைப்புகளிலும், குற்ற விகிதத்திலும், இன்னும் எல்லாவற்றிலும் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது.

ஹைக்கூ கவிதைகளின் பிதாமகனான பாஷோவின் கவிதை ஒன்று


பிரபஞ்சம் ஓர் சிலந்திவலை
ஒரு பூவைப் பறித்தால்
எங்கோ ஓர் நட்சத்திரம் அணைந்து போகலாம்
(கவிதை இதே வரிகளில் இல்லை, இதே பொருளில்)

நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்.

- ஆட்சியினால் விளையும் நன்மை தீமைகளை நாள் தோறும் ஆராய்ந்து அவற்றிற்குத் தக்கவாறு நடந்து கொள்ளாத அரசு அமைந்த நாடு சீர்குலைந்து போய்விடும் (குறள் - 553)

அதிகமான மக்கள்தொகையைக் கொண்ட, பொருளாதார முன்னேற்றமில்லாத ஒரு நாடு அவ்வப்போதைய வளர்ச்சித் திட்டங்களுக்காக வளர்ச்சியடைந்த நாடுகளிடம், சுரண்டிக் கொளுத்த ஏகாதிபத்திய முதலாளிகளிடம் (கந்துவட்டிக்காரர்கள்) கடன் வாங்குகிறது. அதன் விளைவாக மக்களின் மேல் வரிகளை விதிக்கிறது, கடன்கொடுத்தவர்களின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து ஏழை மக்களுக்கான மானியத்தைப் பறிக்கிறது, அத்தியாவசியப் பொருட்களுக்கான விலையை உயர்த்துகிறது, உயிர்வாழ அவசியமற்ற பொருட்களுக்கான சந்தையை திறந்துவிட்டு வாழ்வாதாரங்களை அலட்சியப்படுத்தி, மக்களை மறந்து மேன்மேலும் கடனில் மூழ்குகிறது. மக்கள் வாங்கும் சக்தியை இழந்து குற்றங்களில் ஈடுபட நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.

நடுத்தர, ஏழை மக்களிடம் இருக்கும் கொஞ்சநஞ்ச பணமும் (வாங்கும் ஆற்றல்) சினிமாவாலும், மதுபானங்களாலும், கேளிக்கைகளாலும், ஆடம்பர, அழகுசாதனப் பொருட்களாலும், பன்னாட்டு நிறுவனங்களின் ஜரிகை உணவுகளாலும், குளிர்பானங்களாலும் பறிக்கப்படுகிறது. நாட்டின் வளங்கள் பன்னாட்டு நிறுவனங்களால் உறிஞ்சப்படுகிறது. மருந்துக்கம்பெனிகளின் சோதனைக் கூடமாக ஆகிறது. இறுதியில் நாடே சீர்குலைக்கப்படுகிறது, சின்னாபின்னமாகிறது. உள்நாட்டுக் கிளர்ச்சிகளும், போராட்டங்களும் அதற்கெதிரான அரசின் அடக்குமுறைகளும் கட்டவிழ்த்து விடப்படுகிறது. இன்னும் விரிவான பாதைகளில், பரிமாணங்களில் இந்தச் சிக்கலான வலைப்பின்னல் வளர்ந்து கொண்டேயிருக்கும், இப்படித்தான் ஒரு தேசம் தன் அழிவிற்கான பாதையை எடுத்து வைக்கிறது. (இதை இன்னும் விரிவாக பல்வேறு ஆவண ஆதாரங்களுடன் சொல்லிக் கொண்டே போகலாம், புரிந்து கொள்வதற்கு இதுவே போதுமானது)

(திருப்பதி கோயிலின் உண்டியல் பிரிக்கப்படுகிறது, அதில் விதவிதமான நோட்டுகளும், சில்லறைகளும் இருக்கின்றன, அதைப் பார்த்த ஒருவன் சொல்கிறான்)

எட்டாய் மடிக்கப்பட்ட
ஒரு ரூபாய் நோட்டு
அருகே கட்டுக்கட்டாய்
புத்தம்புது கரன்சி கட்டு
ஹும் இது என்ன உண்டியா?
இல்லை இதுதான் இண்டியா

இவ்வரிகளில் நம் நாட்டின் முகம் தெரிகிறதா? நம் நாடு ஏழை நாடா? ஏழைகளை அதிகமாய் உருவாக்கும் நாடுதான் நம் நாடே தவிர ஏழை நாடல்ல. ஒருவருடத்திற்கு 50 பில்லியன் ரூபாய்க்கு பெப்ஸி வியாபாரம் நடக்கும் நம் நாடு ஏழை நாடா?

கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு

- நாட்டு நிலை ஆராயாமல் கொடுங்கோல் புரியும் அரசு, நிதி ஆதாரத்தையும் மக்களின் மதிப்பையும் இழந்துவிடும் (குறள் 554)

இன்னும் ஒரு ஆண்டுகளுக்குள் 10 கோடி மக்களிடம் மொபைல் (செல்பேசி) போன் இணைப்பு வழங்கப்படும் என்று முழங்குகிறார் நம்நாட்டின் தொலைதொடர்புத்துறை அமைச்சர். சினிமாவில் சிகரெட் தடை செய்யப்படும் என்கிறார் சுகாதாரத் துறை அமைச்சர். தொழில்நுட்பங்களை மக்களின் பட்டினியைப் போக்குவதற்காக தீவிரமாய் செயல்படுத்தாமல், நுகர்வுக்கலாச்சாரத்தில் மூழ்கவைத்துவிட்டு மக்களின் வாங்கும் சக்தியை கொஞ்சம் கொஞ்சமாய் பறித்து, கடன் கொடுத்தவர்களின் வயிற்றில் பாலை வார்த்துக் கொண்டிருக்கிறது அரசாங்கம். செல்பேசியானது அவசியமானதுதான், யாருக்கு?? மாதம் 5000 ரூபாய் சம்பாதிக்கும் ஒருவருக்கு வேண்டுமானால் மாதம் 500 ரூபாய் செலவு வைக்கும் செல்பேசி அவசியமாயிருக்கலாம். ஒரு நாளைக்கு 50 ரூபாய் சம்பாதிப்பதற்கு அல்லல்படும் மக்களுக்கு எதற்கு செல்பேசி அவசியம்? தொலைத்தொடர்பு வணிகத்தில் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் பணக்காரர்களின் பங்குச் சந்தையை உயர்த்தவா? 46 கோடி மக்கள் பட்டினியால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களைக் கொண்ட ஒரு தேசத்தின் நிதியமைச்சர் 80,000 கோடி சொத்து மதிப்புள்ள அம்பானி குடும்பத்திற்கு பாகப்பிரிவினை செய்து வைக்கிறார். ஏழை விவசாயிகளுக்கும் வழங்கப்பட்டு வந்த மின்சாரத்தை ரத்து செய்கிறார் நம் முதலமைச்சர்.

நம்மால் எதுவும் செய்ய முடியாதுதான், சிந்தனை மையத்தில் குவியாமல் மேலோட்டமாக பார்த்தால் நம்மால் எதுவும் செய்ய முடியாதுதான்.


ஆனால் ஒரு குடும்பத்தின் பட்டினிக் கொடுமைக்கு உங்களால் முடிவு கட்ட முடியுமென்றால் உங்களால் எதுவும் முடியும்

ஆதலினால் சிந்திக்க வேண்டும். உங்களின் ஒவ்வொரு சொல்லும், செயலும் பயனுள்ளதுதானா என்று சிந்திக்க வேண்டும்.

நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு தனி மனிதன் மட்டுமல்ல, உங்களைச் சுற்றி ஒரு சிறிய சமூகத்தையும் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நான் உணர்ந்து கொள்கிறேன். உங்களால் இதை வெளிச்சத்துக்கு கொண்டுவரமுடியும். உங்களால் வெளிச்சத்தைக் கொண்டுவரமுடியும். நம் அத்தியாவசியங்களை அல்ல, கேளிக்கைகளை குறைத்துக் கொண்டு ஏதேனும் செய்யலாம் என்பதை உங்கள் சிந்தனையின் சுதந்திரத்தில் விட்டுவிடுகிறேன்.

Images: Darfur, Sudan (Google courtesy)

1 comment:

தேவன் மாயம் said...

நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு தனி மனிதன் மட்டுமல்ல, உங்களைச் சுற்றி ஒரு சிறிய சமூகத்தையும் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நான் உணர்ந்து கொள்கிறேன். உங்களால் இதை வெளிச்சத்துக்கு கொண்டுவரமுடியும்.///

நிச்சயமாக முடியும்..

தேவா..