Hunger in the world of Plenty - Part 3
இந்தியாவின் நெடும்பசி:
உலகின் ஒட்டுமொத்த 860 மில்லியன் பட்டினியால் வாடும் மக்களில் மூன்றில் ஒருபங்கு நம் சகோதர இந்தியர்கள்தான்.
ஐ.நாவின் மனிதவள மேம்பாட்டுப் பிரிவின் 2003 ம் ஆண்டறிக்கையின் படி, இந்திய அரசின் அதிகாரபூர்வ அறிக்கையின் படி 233 மில்லியன் மக்கள் நெடும்பசியால் வாடுகிறார்கள். ஆனால் அரசுசாரா பொதுநல அமைப்புகள் மேற்கண்ட அரசின் கணக்கு குறைவானதே என்றும் பல்வேறு அறிக்கைகளில், ஆய்வு முடிவுகளில் பதிவு செய்கிறார்கள் (ஏறத்தாழ 525 மில்லியன் மக்கள்). புள்ளிவிபரங்களைத் தேடி எடுத்துப் பார்க்கும்போது எண்ணிக்கைகளில் மில்லியன் கணக்குகளில் வேறுபாடு இருந்தாலும், உண்மையானது மிகவும் கொடூரமானதாக இருக்கிறது என்பதே வருத்தத்திற்குறிய உண்மை. நாடு முழுவதிலிருந்தும், பரவலாக கொள்முதல் செய்யப்படும் உணவுப் பொருட்களானது போதுமான பதப்படுத்தும், பாதுகாக்கும் வசதியின்றி, முறையான வினியோகமின்றி யாருக்கும் உபயோகப்படாமல் வீணாக்கப்படுகிறது என்பது மிகவும் கண்டனத்திற்குறியது. மேலும், கள்ளச்சந்தை, பதுக்கல், உணவு தானியங்கள் கடத்தல், அரசின் குறைந்த விலை வினியோக அமைப்புகளில் (ரேஷன் கடைகளில்) நடக்கும் கள்ளத்தனங்களும், முறைகேடுகளும், சமூகவிரோத சுயலாப முதலாளிகளும் கோடிக்கணக்கான மக்களின் பட்டினிப் பசியை ஆண்டுக்கு ஆண்டு அதிகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது வெளிப்படை.
சமூக விரோதிகளுக்கு (சுயநல அரசியல்வாதிகள், சுயநல முதலாளிகள், சமுதாய தலைவர்கள், கள்ள வியாபாரிகள்) ஏதேனும் ஒரு மாநிலம் வெள்ளத்தாலோ, வேறு இயற்கைச் சீற்றங்களாலோ பாதிக்கப்பட்டுவிட்டால் கொண்டாட்டம்தான், அரசு அவசரகதியில் அறிவிக்கும் நலத்திட்டங்கள், கோடி கோடியாகப் பணம் கொள்ளையடிக்க, கேள்வி கணக்கற்ற வேறு சந்தர்ப்பங்கள் கிடைப்பது அரிது. ( எ.கா: அஸ்ஸாம் வெள்ள நிவாரண அரிசி ஊழல், சுனாமி பாதிக்கப்பட்ட பகுதிகளில் நலத்திட்டங்கள்)
63% இந்தியக் குழந்தைகள் பட்டினியால் ....ஊட்டச்சத்துக்குறைவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகமானோர் மஹாராஷ்டிரா, பீகார், ஒரிஸ்ஸா, மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழர்களாகிய நாம், ஒரு விசயத்துக்காக கொஞ்சம் பெருமைப் பட்டுக்கொள்ளலாம், ஆம் தமிழ் நாட்டிலும், கேரளாவிலும்தான் (ஒப்பீட்டளவில்) நெடும்பசியால் வாடுவோர் எண்ணிக்கைக் குறைவு (47% சதவீதத்தினர்). தமிழக அரசின் மதிய உணவுத்திட்டமே காரணம்.
பல்வேறு பரிமாணங்களில் இந்தியாவின் பட்டினியைப் பற்றியே பல பக்கங்கள் எழுதலாம் மிகவும் குற்றவுணர்ச்சியோடு....
ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு
- நல்ல அரசு அமையாத நாட்டில் எல்லாவித வளங்களும் இருந்தாலும் எந்தப் பயனும் இல்லை (குறள்-740)
உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேராதியல்வது நாடு.
- பசியும், பிணியும், பகையுமற்ற நாடுதான் சிறந்த நாடு (குறள் 734)
பட்டினியின் முகங்கள்
உலகம் முழுவதிலும் ஒவ்வொரு வருடமும் நூறு லட்சம் மக்கள் பட்டினியாலும், பட்டினி சார்ந்த நோய்களாலும் இறக்கின்றனர். வெறும் 8 சதவீத்ததினர் மட்டுமே பூகம்பம், வெள்ளம் மற்றும் போர் போன்ற காரணிகளால் பாதிக்கப்படுகிறார்கள். மற்றவர்கள் இலகுவாக மறக்கப்படுகிறார்கள். சமீப வரலாற்றைப் புரட்டுங்கள் 1984-85 ம் வருடங்களில் எத்தியோப்பியாவில் கடும் பஞ்சத்தினால் பாதிக்கப்பட்டவர்கள், பங்களாதேஷ் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள், உள்நாட்டுப் போரால் உருக்குலைந்த காங்கோவிலும் லட்சக்கணக்கான மக்கள் மறக்கப்பட்டுவிட்டார்கள். நம் சிந்தனையின் குரூர ரசனைக்கு ஒவ்வொரு நாளும் சுவாரசியம் மிகுந்த பேரழிவு செய்திகள் நம் கிளர்ச்சியைத் தூண்டியவண்ணம் பழைய செய்திகளை மறக்கவைத்து விடுகிறது. ஆனால் நெடும்பசியால் பாதிக்கப்பட்டிருக்கும் கோடிக்கணக்கான மக்கள் தலைப்புச் செய்திகளில் வருவதில்லை. கூறியது கூறல் குற்றமெனினும் மீண்டும் நினைவுபடுத்திக் கொள்கிறேன், ஒட்டுமொத்த அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய யூனியனின் மக்கள் தொகைக்கு நிகரான அளவில் மக்கள் பட்டினியால் வாடுகிறார்கள்.
வயது வித்தியாசம் இல்லாமல் பாலூட்ட இயலாத தாய்மார்களின் குழந்தை முதல், கவனிக்கவோ அக்கறை காட்டவோ, முதியோர் இல்லங்களுக்கு பணம் கட்டவோ யாரும் இல்லாத முதியோர்கள் வரை வயது வித்தியாசம் இல்லாமல் வாடுகின்றனர். வழியறியாது கிராமப்புறங்களிலிருந்து இடம்பெயர்ந்து, நம் நாகரீகத்தின் கறை என்று குற்றவுணர்ச்சியில்லாது நம்மை விமர்சிக்கவைக்கும் நகர்ப்புறங்களின் சேரிப்பகுதியில் வாழ்பவர்களும், பிற கனவான்களின் நிலத்தில் உழைத்துக் கொண்டேயிருக்கும், பரந்து விரிந்த பூமியில் தனக்கென் நிலமற்ற விவசாயக் கூலிகளும், அநாதையாக்கப் பட்ட குழந்தைகளும், உயிர்வாழ்வதற்கு கூட அதீத ஊட்டச்சத்துள்ள உணவுத் தேவையுடைய ஏழை மக்களும், குழந்தைகளுக்குப் பாலூட்ட சக்தியற்ற ஒரு கவளம் சோறுகூட இல்லாத அப்பாவிப் பெண்களும்..... வயது வித்தியாசம் இல்லை. சொல்லக் கொதிக்குடா நெஞ்சம், ஆம் வெறும் சோற்றுக்குத்தான் இந்தப் பஞ்சம்.
பாதிக்கப்பட்டவர்களை, அதன் கோரப்பிடியில் துரதிருஷ்ட வசமாய் சிக்கிக் கொண்டவர்களை அவர்களின் ஆயுட்காலம் முழுமைக்கும் நோயுற்றவர்களாக, பலவீனர்களாக, வலிமையற்றவர்களாக வைத்திருப்பதோடு மட்டுமல்ல அவர்களின் தொடர்ச்சியான சந்ததியினரையும் ஆட்டிப்படைக்கும் சக்தி கொண்டது நெடும்பசி.
இவ்வாறாக நெடும்பசியின் விளைவானது பரம்பரைச் சக்கரமாக சுற்றிக் கொண்டேயிருக்கும். நெடும்பசிக்கு ஆளான பெண்ணுக்குப் பிறக்கும் குழந்தைகள் குறைவான எடையுடையவர்களாக (போதுமான எதிர்ப்புச் சக்தியற்றவர்களாக, நோய்க்கு ஆளாகக் கூடியவர்களாக பிறப்பார்கள். ஒவ்வொரு வருடமும் 20 மில்லியன் குழந்தைகள் குறைவான எடையுடையவர்களாக (Low Birth Weight-LBW) பிறக்கின்றனர். அதில் 30 சதவீதத்தினர் இந்தியாவிலும், பங்களாதேஷிலும். ஒருவேளை குழந்தைப் பருவத்தில் அவர்கள் மரணத்திலிருந்து தப்பிவிட்டாலும் ஊனமுடையவர்களாக, உடல் மன வளர்ச்சியவற்றவர்களாக பரிணமிக்கும் பரிதாபம் நிகழ்கிறது. இதே காரணத்தினால்தான் வளர்ந்து பெரியவர்களாக ஆகும் போது உழைக்கும், பொருளீட்டும் வலிமையற்றவர்களாகவும், அதிகம் நோய்வாய்ப்படும் உடல்வாகைக் கொண்டவர்களாகவும், சிந்தனைத் திறன் குறைந்தவர்களாகவும் ஆகிவிடுகிறார்கள். (எப்போதேனும் தொலைக்காட்சியில் வரும் செய்திகளில், காலராவினால், டெங்கு காய்ச்சலினால், மூளைக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக இறந்து போகும் குழந்தைகள் பணக்கார/மேல்தட்டு வர்க்கத்துக் குழந்தைகளாக இருந்ததுண்டா? யாரேனும் கண்டதுண்டா அப்படி?)
இவர்கள் எங்கே இருக்கிறார்கள்?
நெடும்பசிக்கு ஆளானவர்களில் முக்கால் சதவீதத்தினர் ஆசியாவின், ஆப்பிரிக்காவின் கிராமப்புறங்களில் உணவுத்தேவைக்கு விவசாயத்தை மட்டும் நம்பியவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களுக்கு வருவாய்க்கான மாற்று ஏற்பாடுகளோ, பொருளீட்டுவதற்கான வேலை வாய்ப்புகளோ அற்றவர்களாக பட்டினிப் பசிக்கு ஆளாகக் கூடிய ஆபத்தில் இருக்கிறார்கள். ஐ.நாவின் உணவு மற்றும் விவசாய நல அமைப்பின் (FAO) மதிப்பீடுகளின் படி, 410 மில்லியன் மக்கள் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே. இயற்கைச் சீற்றத்தினால் உண்டாகும் பஞ்சத்தினால் பாதிக்கப்படும் நிலப்பரப்புகளில் வாழ்பவர்கள். இதில் ஐந்தில் ஒரு பங்கு மக்கள் நிலமற்ற ஆனால் விவசாயக் கூலிகள். மற்ற 10 சதவீதத்தினர் (80 மில்லியன்) மீன்பிடித்தலை உணவுத் தேவைக்கான தொழிலாகவும், வேட்டையாடுதலைத் தொழிலாகக் கொண்ட காட்டுப்பகுதிகளில் வாழ்பவர்கள். மீதமுள்ள 20 சதவீதத்தினர் வளர்ந்து வரும் நகரங்களில், மேட்டுக்குடியினரால் குற்றவாளிகளின் கூடாரமாகச் சித்தரிக்கப்படும் சேரிகளில் வாழ்பவர்கள். பன்னாட்டு உணவுக் கொள்கை ஆராய்ச்சி மற்றும் பயிற்சியகத்தினரால் (International Food policy research Institute - UN) 14 வளர்ந்து வரும் நாடுகளில் நடத்தப்பட்ட கள ஆய்வுகளின் படி (1985-1996), குறைவான எடையுடன் பிறக்கும் (LBW) குழந்தைகளின் விகிதமானது கிராமப்புறத்தை விட அதிகமாக இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
பின்னுரையாக என்னுரை:
வாரவிடுமுறையிலும், பிறந்தநாள், திருமணநாள், காதலர் தின கொண்டாட்டங்களின் போதும் நண்பர்களுடனும், குடும்பத்தினர்களுடனும் சீன உணவுகளும், செட்டிநாட்டு உணவுகளும், இத்தாலி (பிட்சா) உணவுகளும் என வகை வகையாக உண்டு களிக்கிறோம். ஆயிரக்கணக்கான பணம் ஒரிரு மணி நேரத்தில் ஏப்பமாகிவிடுகிறது. கேளிக்கைகளும், பனிக்கூழும், பரிசுப்பொருள்களுமாக நாம் வாழ்க்கையை சகல பரிமாணங்களிலும் அனுபவிக்கிறோம். இதனால்தானோ சகமனிதர்களின் துயரங்களைக் காணாதிருக்கிறோம்.
இக்கட்டுரையை எழுதவேண்டி, உரிய ஆவணப்பிரதிகளை படித்துக்கொண்டிருக்கையில் மிகுந்த பதைபதைப்புக்கும், தீவிர மன உளைச்சலுக்கும் ஆளானேன். வாரவிடுமுறையில் நண்பர்களுடன் வெளியில் இரவு உணவுக்காக செல்வது வழக்கம். கடந்த வாரங்களில் தீவிரமான குற்ற உணர்ச்சியோடும், பயத்தோடும், தீவிரமான யோசனைகளுடனும் நிம்மதியற்றவாறே நாட்கள் நகர்ந்தது.
உங்களுக்கு வாய்ப்பிருந்தால் அடுத்த முறை சென்னைக்குச் செல்லும்போது, அதிகாலை நேரத்தில் சேப்பாக்கம் விளையாட்டரங்கத்தைச் சுற்றியுமுள்ள நடைபாதைகளிலும், இரவு நேரங்களில் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை நடைபாதைகளிலும், எக்மோரைச் சுற்றியுள்ள சேரிகளின் பக்கம் காலையிலும் ஒரு நடை சென்று பாருங்கள். எங்கிருந்தோ துரத்தப்பட்ட, வெளியேற்றப்பட்ட அல்லது வாழவழியறியாது எங்கிருந்தோ வெளியேறிய மக்களின் துயரங்களைக் காணுங்கள். நம்மிடத்தில், நம் சமூகத்தில் மறைந்திருக்கும் குரூரத்தினை அகக் கண்களால் காணுங்கள். கிராமத்திலிருந்து வந்தவர்கள், சுற்றியுள்ள விவசாய கிராமங்களுக்குச் செல்லுங்கள், அங்குள்ள ஏழை மக்களின் சமூகப் பொருளாதார வாழ்வை உற்று நோக்கி ஆய்வு செய்து பாருங்கள். நாம மறைத்துக் கொண்டிருக்கும் அல்லது நம் பிரக்ஞைக்கு எட்டாதிருக்கும் யதார்த்தத்தின் குரூர நடனத்தினைக் காண்பீர்கள். 2003 ம் ஆண்டின் இறுதியில், எனது நண்பனோடு மருத்துவ ஆய்வுகளுக்காக கிராமப் புறங்களில் சுற்றி வந்தபோது காணக்கிடைத்த ஏழ்மையின் தரிசனம் வேதனை மிக்கது.
வறியார்க்கொன் றீவதே ஈகைமற் றெல்லாங்
குறியெதிர்ப்பை நீர துடைத்து
- இல்லாதவர்க்கு வழங்குவதே ஈகைப்பண்பாகும். மற்றவர்களுக்கு வழங்குவது என்பது ஏதோ ஓர் ஆதாயத்தை எதிர்பார்த்து வழங்கப்படுவதாகும் (குறள் 221)
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமிய ருணல்.
- பிறர்க்கு ஈவதால் குறையக்கூடுமென்று, குவித்து வைத்துள்ளதைத் தாமே உண்ணுவது என்பது கையேந்தி இரந்து நிற்பதைக் காட்டிலும் கொடுமையானது (குறள் 229)
ஆதலினால் சிந்தியுங்கள்!
உங்கள் சிந்தனையின் தீர்க்கமான ஒப்புதலோடு, சூழலின் தேவைக்குத் தகுந்தாற்போல் ஏதேனும் செய்யுங்கள். உங்களின் ஆற்றலினால் யாரேனும் வறுமையின் வரலாற்றைக் கூட மாற்றிவிடக்கூடும்.
(தொடரும்....)
Thanks
ஆவண ஆதாரங்கள்:
India home to 233 hungry people
http://www.rediff.com/news/2003/aug/07hungry.htm
Food and Agricultural Organization (UN)
http://www.fao.org/es/ess/mdg_kit/pdf/India_e.pdf
Institute for International Economic Studies (Stockholm University)
http://www.iies.su.se/publications/seminarpapers/699.pdf
Frontline (Hindu) - Behind the "shining India"
http://www.frontlineonnet.com/fl2102/stories/20040130000307600.htm
Hindu Business Line
http://www.blonnet.com/2002/12/17/stories/2002121700070800.htm
Child Relief and You (CRY)
http://www.nri-worldwide.com/cgi-local/ts.pl?action=fetch&area=shameofindia&o=5
Sunday, March 30, 2008
Subscribe to:
Posts (Atom)